வெள்ளி, 13 நவம்பர், 2015


சென்னைப் பெரு நகரத் தொழிற் சங்க வரலாறு
ஒரு நூலின் பெருமை அது அன்றைய சமகாலத்திற்கு பொருந்துவதுடன் இணைந்தது. அத்தகைய பெருமைக்குரிய நூல்கள் சில மட்டுமே, அதில் ஒன்றாக, தொழிலாளர் போராட்டம் குறித்த வரலாற்றைப் பேரா. தே. வீரராகவன் எழுதியுள்ளார். சென்னை ..டியில் பேராசிரியராகப் பணியாற்றி சமீபத்தில் மறைந்த தே. வீரராகவன், தன்னுடைய முனைவர் பட்டத்திற்காக, மேற்கொண்ட ஆய்வு, மேற்படி நூலாக வெளிவந்துள்ளது. தமிழில் இந்நூலை 2003 ல் அலைகள் பதிப்பகம், 150 ரூபாய் விலையில் 384 பக்கங்களில் வெளிக் கொணர்ந்தது.
பேரா. தே. வீரராகவன் பார்வையற்றவர், ஆனால் மிகக் கடுமையான உழைப்பின் மூலம் நண்பர்கள் மற்றும் தோழர்கள் படிக்க உதவியதைப் பயன்படுத்தி, ஆய்வை நிறைவு செய்தார். தொழிற்சங்க உணர்வைக் கடந்து, தொழிலாளி வர்க்கத்தின் காத்திரமான அரசியலை, புரட்சிகர வர்க்க உணர்வை நோக்கி நகர்த்துவதற்கான தேவையை முன்னுறுத்தி, ஆய்வுக்கானத் தேடல்களை நிகழ்த்தி உள்ளார்.
இந்த ஆய்வு இந்தியா பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் காலணி நாடாக இருந்த 1918 முதல் 1939 வரையிலான காலத்தில் சென்னை நகரில் நடைபெற்ற தொழிற்சங்கப் போராட்டம் பற்றியது. அன்றைய சூழலில் இருந்த அரசியல், அடக்குமுறை, சங்க அங்கீகாரம் குறித்த வாதங்கள் மற்றும் தேசியத் தலைவர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் பங்கேற்பு குறித்து, இன்றைய தலைமுறை புரிந்து கொள்வதற்கான தன்மையில், ஆய்வு செய்யப் பட்டுள்ளது.
ஆய்வுப் பணியில் வீரராகவன் ஈடுபட்டிருந்த நாள்களில், தமிழகத்தின்  தொழிற் சங்கம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் ஆகியவற்றில் தலைவர்களாக இருந்த, தோழர்கள். பி. ராமமூர்த்தி, வி.பி. சிந்தன் ஆகியோர் தமிழில் இந்த ஆய்வு, நூலாக வெளிவர விரும்பினர் என்பதை, .சீ. கண்ணன் தனது மொழிப்பெயர்ப்பாளர் குறிப்பில் எழுதி உள்ளார். இந்நூல் இன்றைய தலைமுறைக்கு ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய போராட்ட வரலாற்றை நினைவு படுத்துகிறது. அதே வேளையில் புதிய போராட்டத்திற்கான உந்து சக்தியாகவும் அமைந்துள்ளது.
சென்னை நகரில் தொழிலாளர் வளர்ச்சி:
சென்னை நகர தொழில் வளர்ச்சி குறித்த ஏராளமான புதிய தகவல்களுடன் நூல் துவங்குகிறது. மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் எப்போதும் சென்னை யாருக்கும் தலைநகரமாக இருந்ததில்லை. பல நகரங்களைப் போல் சுரங்கம் அல்லது மிகப் பெரிய உற்பத்தி ஆலைகளைக் கொண்டு சென்னை தொழில் வளர்ச்சி பெறவில்லை. சென்னையில் துறைமுகம் இருந்ததால், அது நிர்வாக நகரமாக வளர்ச்சி பெற்றது. எனவே டிராம், அச்சகம், மெட்டல், நகராட்சி நிர்வாகம், மற்றும் பஞ்சாலை என்பது தொழிலாளர்களைப் பெரும் அளவில் கொண்டிருந்த நிர்வாகங்கள் ஆகும். இது போன்ற விவரங்கள் சென்னையின் விரிவாக்கம் குறித்து ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைத்துள்ளது.
சென்னை துறைமுகம் 3000 க்கும் மேற்பட்ட உடல் உழைப்புத் தொழிலாளர்களுடன் கூடிய தொழிலாளர் எண்ணிக்கையை கொண்டிருந்தது. அதேபோல் ரயில்வே பட்டறையை மதராஸ்தென்மராத்தா கம்பெனி பெரம்பூரில் அமைத்தனர். இங்கு 5500 தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். டிராம், மண்ணெண்ணை மற்றும் பெட்ரோலிய பொருள்கள் விற்பனையில் 2000 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். சின்னதும் பெரியதுமான 60 அச்சகங்களில் 5000 தொழிலாளர்கள் வேலை செய்தனர்.
1910 ல் குரோம்பேட்டையில் தோல் பதனிடும் தொழிற்சாலை அமைக்கப் பட்டு அதில் 5000 தொழிலாளர்கள் தங்களை வேலையில் ஈடுபடுத்திக் கொண்டனர். பக்கிங்காம் மற்றும் கர்நாட்டிக் மில்களில் 8976 தொழிலாளர்களும், சூளை மில்லில் 2000 தொழிலாளர்களும் பணி செய்தனர். இது தவிர திருவொற்றியூரில் விம்கோ போன்ற ஆலைகள் மூலமும் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் வளர்ச்சி பெற்றனர். பீடித்தொழிலில் திருவல்லிக்கேணி மற்றும் ராயபுரம் பகுதிகளில் 4000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இவர்கள் காண்ட்ராக்ட் காரர்களில் வீடுகளில் அமர்ந்து பீடி சுற்றும் வேலைகளைச் செய்து வந்தனர். இவையன்றி கைத்தறி உள்ளிட்ட சிறு மற்றும் பாரம்பரியத் தொழில்களிலும் ஏராளமானோர் பணியாற்றினர். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் வேளாண் தொழிலில் இருந்து ஆலைத் தொழிலாளர்களாக மாறும் நிலை ஏற்பட்டதையும், இத்தகையத் தொழிலாளர்கள் மிகக் கடுமையான சுரண்டலுக்கு ஆளானதையும் அறிய முடிகிறது.
உருவானத் தொழிற்சாலைகளின் நிர்வாகிகள், மேற்பார்வையாளர், தொழில் நுட்பர், ஆகியோர் பெரும்பாலும் ஆங்கிலேயர்களாக இருந்துள்ளனர். பயிற்சியும், தேர்ச்சியும் கொண்ட தொழிலாளர்களிலும் குறிப்பிடத்த அளவிற்கு, ஆங்கிலேயர் மற்றும் ஐரோப்பியர் இடம்பெற்று இருந்தனர். மற்ற அனைத்து வகை உழைப்பைச் செலுத்துவோரும் இந்தியர்களாக இருந்தனர். இவர்கள் பெரும்பாலும் சென்னையைச் சுற்றிய மாவட்டங்களைச் சார்ந்தவர்கள் ஆவர். கைவினைஞர்கள், விவசாயம் சார்ந்தோர், நிலமற்ற விவசாய கூலிகள் (பெரும்பாலும் தலித்துகள்) என, சொந்த கிராமங்களில் வறுமைக்குத் தள்ளப் பட்ட அனைவரும், சென்னைக்கு வந்தனர்.
1871ம் ஆண்டு சென்னையில் 4 லட்சம் பேர் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. 1921ல் இது 5 லட்சமாக உயர்ந்தது. ஆனாலும் வேலையின்மையும் தலைவிரித்து ஆடிய நிகழ்வுகளும் குறிப்பிடப் பட்டுள்ளது. இதன் மூலம் முதலாளித்துவ தொழில் வளர்ச்சியுடன் வேலையின்மை ஒட்டிப் பிறந்தது, என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
தொழிற்சங்கம் அமைவதற்கான சூழல்:
1870 களில் ஆலைகள் உருவான பின்னணியில் வேலைத்தளத்தில் கொடுமையான சுரண்டல் முறைகள் இருந்து வந்தது. உதாரணத்திற்கு, இந்தியாவில் வேலை நேரம் குறித்த வரம்பு தீர்மானிக்கப் படவில்லை. குழந்தைகள் பெண்கள் குறைவான கூலிக்கு வேலை வாங்கப் பட்டனர். இதனால் இங்கிலாந்தின் லங்காக்ஷயரை விட குறைவான செலவில் கூடுதலான உற்பத்தி நடைபெற்றது. எனவே சந்தையில் இந்திய உற்பத்தி மலிவான விலையில் ஆதிக்கம் செலுத்த முடிந்தது. தொடர் போராட்டங்களின்  காரணமாக, இந்தியாவில் 7 வயதுக்குக் குறைவான சிறுவர்களை வேலைக்கு வைத்துக் கொள்ளக் கூடாது, என தடை விதிக்கப் பட்டது. 12 வயதுக்கு குறைவான சிறுவர்களின் வேலை நேரம் 9 மணி நேரம் என வரையறுத்து பின்னர் படிப்படியாக மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. 1908 ல் ஆண்களுக்கு 12 மணி நேரம் வேலை நேரம் என வரையறை செய்யப் பட்டது. 1934ல் இந்தியத் தொழிற்சாலைகள் சட்டத்தில் ஒருவாரத்தின் அதிகபட்ச வேலைநேரம் 54 மணி நேரம் எனத் தீர்மாணிக்கக்கப் பட்டது.
சென்னை நகரின் குடியிருப்பு குறித்து, ராயல் கமிஷன் சமர்பித்த அறிக்கை, சென்னை நகரின் மக்கள் தொகையில் கால்வாசி 150000 பேர், 25000 ஓரறை இருப்பிடங்களில் வசித்தனர். இதுவும் இல்லாதவர்கள் சாலையோரங்களிலும், கிடங்குகளின் திண்ணைகளிலும் படுத்துறங்கினர்”, எனக் குறிப்பிட்டு உள்ளார். இக்குடிசைகளுக்குள் காற்று போவதற்கும் வாய்ப்பில்லை. 1934 ல் மேற்கொண்ட கணக்கெடுப்பின் படி, வேலைக்குச் சென்ற, மாதாந்திர ஊதியம் பெற்ற 4736 நபர்களும், அன்றாடக் கூலிகளில் 3358 பேரும் வீடற்றவர்களாக, படுக்க இடமற்றவர்களாக வாழ்ந்துள்ளனர். இவர்களில் பெரும்பான்மையோர் துறைமுகத்திலும், கொத்தவால் சாவடியிலும் வேலை செய்தனர்.
அதேபோல் குறைவான ஊதியத்தில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் தங்கள் சம்பளத்தில் பிடித்தம் என்ற தண்டனையை அனுபவித்தனர். இது டிராம்வேயில் பணிபுரிந்த தொழிலாளர்களை மிகப் பெரிய மன உலைச்சலுக்கு ஆளாக்கியது. பல்வேறு காரணங்களுக்காக அபராதம் என்பது சாதரணமாக மலிந்து போயிருந்தது. இதற்கு மேலாக நியாயவிலைக் கடை பாக்கி, ஆயுத பூஜை, தீபாவளி ஆகிய பண்டிகைகளைக் கொண்டாடுவதற்கான கட்டாய நன்கொடை பறிப்பு, போன்ற பிடித்தங்கள் போக தொழிலாளர் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சம்பளம் மிக சொற்பமாக இருக்கும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
ஆலைக்குள் வேலை வாங்கப் பட்ட விதம் மிகக் கொடியதாக இருந்தது. 1917ல் நடந்ததாக வீரராகவன்  பதிவு செய்த தகவல் கொடிதிலும் கொடியதாக இருக்கிறது. ஒரு தொழிலாளிக்கு அவசரமாக கழிப்பறைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தத்தை இயற்கை அழைப்பு கொடுத்துள்ளது. ஆனால் மேலாளர் அனுமதிக்கவில்லை. ஒரு கட்டத்தில் தாங்கிக் கொள்ள முடியாத தொழிலாளி, வேலைத் தளத்திலேயே மலங்கழித்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மேலாளர், அந்தத் தொழிலாளியை அவ்விடத்தைச் சுத்தம் செய்யச் சொல்லி செய்த கொடுமை தாங்க முடியாததாக இருந்துள்ளது. இது போல் வேலைத்தளத்தில் தரக் குறைவாக தொழிலாளர்கள் நடத்தப் பட்டுள்ளனர், வேலையும் வாங்கப் பட்டுள்ளனர்.
தொழிலாளி கடன் வாங்குவது தவிர்க்க முடியாததாக மாறியது. குறிப்பாக சமூக கடமைகளான, திருமணம், மருத்துவம் போன்றவைகளுக்காக கடன் வாங்குவது தொழிலாளிகளிடம் அதிகரித்தது. இந்த கடனைத் திரும்ப செலுத்துவதும் ஒரு கடமையாக அதிகரிக்கிற போது, தொழிலாளர்கள் ஏராளமான தகராறுகளுக்கு ஆளாகியுள்ளனர். இவைகளை எல்லாம் கணக்கிட்டு தொழிலாளி சம்பள உயர்வு கேட்கிற போது, இந்தியத் தொழிலாளியின் திறனுக்கு இது போதும் என்ற வாதமே முன்வைக்கப் பட்டதாகத் தெரிகிறது. இந்த வாதம் பொய் என்பதை, அரசு அச்சக கண்காணிப்பாளர் கிரீன் என்பவர் தெரிவித்து உள்ளார். “ அமெரிக்க அச்சக ஊழியரைவிட, அதிக அளவு வேலை முடித்து தருபவராக இந்திய ஊழியர் இருக்கிறார். இந்தியத் தொழிலாளியின் உற்பத்தி திறன் பற்றி குறை கூற முடியாது”, எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே அப்பட்டமான சுரண்டல் முறை மேற்படி பிரிட்டிஷாரின் ஆலைகளிலும், அச்சகங்களிலும், டிராம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களிலும் நடைபெற்றுள்ளது. இதை எதிர்ப்பதற்கான சூழலும் இருந்துள்ளது. ஆங்காங்கு மோதல்களும் நடைபெற்றுள்ளது. தீர்வு கிடைக்காத நிலையிலேயே சங்கம் அமைக்கும் நிர்பந்தம் தொழிலாளிக்கு ஏற்பட்டுள்ளது.
பொருந்திப் போகும் அனுபவம் அன்றும் – இன்றும்:
தொடர் போராட்டங்கள் காரணமாக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே, இந்தியத் தொழிற்சங்க சட்டம் உருவாக்கப் பட்டுள்ளது. ஆனால் அதை அங்கீகரித்து பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்பது, உறுதி செய்யப் படவில்லை. இதையே இன்று வரை அனைத்து அரசுகளும், தொழிற் சங்க அங்கீகாரச் சட்டம் இயற்ற விரும்பாததைப் பார்க்க முடியும். அன்று சிம்ப்சண் வெளியாட்களுடன் பேசமுடியாது, எனக் குறிப்பிட்டதைப் போலவே, இன்று இந்தியாவில் தொழில் துவங்கியுள்ள எண்ணற்ற பன்னாட்டு நிறுவனங்கள் குறிப்பிட்டு வருகின்றன.
1926ல் பக்கிங்காம் கர்நாட்டிக் மில்லில் வேலை நிறுத்தப் போராட்டம் பெருமளவில் நடைபெற்ற போது, நிர்வாகத்தின் ஆதரவு பெற்ற தொழிற் சங்கம் உருவாக்கப் பட்டு, அவற்றுடன் பேச்சு வார்த்தை நடத்துகிற அநாகரீகம் இருந்ததை நூல் வெளிப்படுத்துகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் அச்சகத்தில் தொழிலாளர் வேலை நிறுத்தத்தின் போது, ராம்நாத் கோயெங்கா, போட்டி சங்கத்தை உருவாக்கி, போராட்டத்தைச் சிதைக்க முயற்சித்து உள்ளார்.
அது இன்றளவும் இந்தியாவில் நீடித்து வருகிறது. ஹூண்டாய் நிறுவனத்தில் UUHE என்ற தொழிற் சங்கத்தைப் போராடிக்கொண்டுள்ள HMIEU விற்கு எதிராக உருவாக்கி அதை அங்கீகரித்துள்ளனர். பல ஆலைகளில் வெல்ஃபேர் கமிட்டி என்ற பெயரிலும், வேறு பெயரிலும் தொழிற் சங்கத்திற்கு போட்டியான குழுக்கள் உருவாக்கப் பட்டு, தொழிலாளர் ஒற்றுமை சிதைக்கப் படுகிறது. நோக்கியா சீமென்ஸ் போன்ற நிறுவனம் ஒன்னரை ஆண்டுகள் தொழிற் சங்கத்துடன் பேசி ஊதிய ஒப்பந்தத்தை உருவாக்கியபின், சங்கத் தலைவர்கள் கையொப்பம் இடக் கூடாது. தேவை எனில் தொழிலாளர்கள் கையொப்பம் இடட்டும், என வலியுறுத்தி, தொழிற் சங்கத்தை அடக்க முயற்சித்தனர்.
அன்று 3000 க்கும் அதிகமான, சென்னைக் கார்ப்பரேசன் தொழிலாளர்கள் ஒரு ரூபாய் சம்பள உயர்விற்காக வேலை நிறுத்தப் போராட்டம், நடத்திய போது, தொழிலாளர்களிடையே இருந்த மாலா, மாடிகா, எரிக்கலா, ஒட்டா போன்ற சாதிய வேறுபாடுகளைப் பயன் படுத்தி, போராட்டத்தை உடைக்க முயன்றுள்ளனர். இத்தனைக்கும் மேற்படி சாதிகளில், தொழில் ரீதியிலோ, சமூக ஒடுக்குமுறை ரீதியிலோ எந்த வித்தியாசமும் இல்லை. ஆனாலும் பிளவு படுத்தப் பட்டனர். இதில் அன்றைய தொழிலாளர் துறை ஆணையத்திற்கும் பங்குண்டு. இன்று வரையிலும் தமிழகத்தில் சாதிய அடையாளங்களை முனவைத்து அல்லது அரசியல் கட்சி வேறுபாடுகளை மையப் படுத்தி, தொழிலாளர் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வருகிற ஏற்பாடுகள் உள்ளது. இதை ஆளும் கட்சிகளின் துணை கொண்டு, கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்து வருகின்றன.
வரலாறு 100 ஆண்டுகளைக் கடந்து பயணித்து வந்தாலும், சுரண்டலும், ஒடுக்கு முறையும், புதிய வடிவங்களில் தொடருகின்றன. புதிய நிறுவனங்களும், சமூகத்தில் உள்ள அடையாளங்களை கூடுதலாக முன்னுறுத்தி, தொழிலாளி வர்க்க குணத்தைப் பின்னுக்குத் தள்ள முயற்சிக்கும் இன்றைய சூழலில், இடதுசாரி ஊழியர்களும், ஒவ்வொரு தொழிற் சங்க ஊழியரும், தொழிலாளியும் வாசிக்க வேண்டிய, மிகமுக்கியமான புத்தகம்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக