பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தியத்தின் காலனி ஆதிக்க ஆட்சியில் இருந்து, பெற்ற இந்தியாவின் விடுதலை கொண்டாட்டத்திற்கு வயது 74. வரலாற்றில் மிக முக்கிய தருணமான 75 ம் ஆண்டு பவள விழா கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது. ஆனாலும், விடுதலை இந்தியா குறித்த கனவுகள் பெரும்பாலும், கனவாகவே நீடிக்கிறது. ஏகாதிபத்தியத்திடம் இருந்து பெற்ற அரசியல் விடுதலை மட்டும் போதாது, எஞ்சிய உரிமைகளையும், கனவுகளையும் நிறைவேற்றிட, பொருளாதார விடுதலை, சமூக விடுதலை போன்றவையும் தேவைப்படுகிறது. விடுதலை பெற்ற காலத்தில், இந்திய ஆட்சியாளர்கள் பின்பற்றிய வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, உள்ளிட்டவை ஏற்படுத்திய, ஒரு சில நம்பிக்கைகளை, 30 ஆண்டு காலமாக அமலில் உள்ள இந்திய ஆட்சியாளர்களின் கொள்கைகள் தகர்த்து வருகின்றன. காலனியாதிக்கத்தில் இருந்து பெற்ற விடுதலையை, நவகாலனியாதிக்கத்திற்குள் தள்ளுவதை, வளர்ச்சி என பெருமை பொங்க பேசுவது, ஆளும் வர்க்கத்தின் வாடிக்கை ஆகியுள்ளது.
“போராடிய மக்கள் சுதந்திர இந்தியாவில் தங்களுக்கு ஒரு புதிய வாழ்க்கையை அமைத்து கொள்ள விரும்பினர். துயரம் மிகுந்த வறுமைக்கும், சுரண்டலுக்கும் ஒரு முடிவு வரும் என காத்திருந்தனர். நிலம், நியாயமான ஊதியம், வீட்டு வசதி, கல்வி, வேலை, சுகாதாரம் என்பதே சுதந்திரம் என போராடிய மக்கள் கருதி இருந்தனர். சமூகத் தீங்குகளான சாதியம், சமூகப் பகைமை போன்றவற்றில் இருந்து விடுதலை, ஜனநாயக கட்டமைப்பிற்குள் மக்களின் பண்பாட்டு தேவைகளை பூர்த்தி செய்தல் ஆகியவற்றையே மக்கள் சுதந்திரம் எனக் கருதினர்”, என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பாரா 3.1 குறிப்பிடுகிறது. போராட்டம் நடத்திய மக்களில் ஒரு சிலரை தவிர அனைவரும் தற்போது உயிருடன் இல்லாத நிலையில், போராடியவர்களின் அர்ப்பணிப்பை புறக்கணித்து, அத்தகைய போராட்டத்தில் பங்கெடுக்காத, பிரிட்டிஷாருடன் சமரசங்களை செய்து கொண்ட, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அரசியல் பிரிவான பாரதிய ஜனதா கட்சியின் கையில், சுதந்திர இந்தியாவின் ஆட்சி சிக்கிக் கொண்டுள்ளது.
விடுதலை போரின் நாயகர் யார்?
ஒரு நாட்டின் விடுதலை கொண்டாட்டத்திற்கு சொந்தம் கொண்டாடுபவர் யாராக இருக்க முடியும், என கேள்வி எழுப்பினால், ஒன்று போராட்டங்களை முன்னெடுத்து, சிறை தண்டனை பெற்றவர், வழக்குகள் பதிவானவர், கல்வி, வேலை, சொத்து உள்ளிட்டவைகளை பறி கொடுத்தவர், என்பது மிக முக்கியமானது. இரண்டு போராட்டங்களில் பங்கெடுப்பது, பிரச்சாரம் செய்வது ஆகியவை. மேற்படி இரண்டும் செய்யாமல், போராட்டத்தையும், திட்டமிடலையும் காட்டி கொடுப்பதை ஒரு பணியாக செய்தவர்களை எப்படி அங்கீகரிக்க முடியும்? இங்கு வரலாறு மிக சரியாக அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்த படுவதன் தேவை அதிகரித்துள்ளது.
இந்திய விடுதலை போரில் மன்னர்கள் முதலிலும், பின்னர் படித்த இளம் பிரிவினர் மற்றும் அறிவு ஜீவிகளும் ஈடுபட்டனர். கட்சி அரசியல், மக்கள் ஈடுபடுவது என்பது மூன்றாவது கட்டமாகவே நடந்தது. அந்த மூன்றாவது கட்டத்திலும், “உழைக்கும் வர்க்கம், விவசாயிகள், பழங்குடியினர், நடுத்தர வர்க்கத்தினர், அறிவு ஜீவிகள், பெண்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் என பெரும் பகுதி மக்களின் பங்கேற்பு காரணமாகவே விடுதலைக்கான தேசிய இயக்கம் வெற்றி கண்டது”, என மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் பாரா 3.2 கூறுகிறது. இது மிக முக்கியமான கட்டமாகும். அதாவது, பல நூறு தேசங்களாக பிரிந்து கிடந்த மக்களிடம், மொழி, இனம், சாதி, போன்ற அடையாளங்கள் கடந்து, பிரிட்டிஷாருக்கு எதிரான தேசிய உணர்வு உருவானதே முக்கிய காரணம் ஆகும். இந்த மாபெரும் மக்கள் திரளே விடுதலைப் போரின் நாயகர்கள் என மார்க்சிஸ்ட் கட்சி குறிப்பிடுகிறது. இதற்கான முன்முயற்சி எடுத்த தேசிய தலைவர்களும் போற்றுதலுக்கு உரியவர்களே. இந்த அங்கீகாரத்தை அன்றைய மக்கள் அளித்ததையும் கவனிக்க வேண்டும். கப்பற் படை எழுச்சி போன்ற பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்ட களத்தில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் லீக், கட்சிகளின் கொடிகள் பறக்க விடப்பட்ட வரலாறு, வீரர்கள் தன்னெழுச்சியாக வழங்கிய அங்கீகாரம்.
அன்று பிரதிபலித்த மூன்றுவித கருத்தாக்கங்கள், இன்றும் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. ஒன்று முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்கள் தலைமையில் அரசியல் விடுதலை, என காங்கிரஸ் முன் வைத்தது. இரண்டாவது தொழிலாளி, விவசாயி தலைமையில் அரசியல் விடுதலையுடன் பொருளாதார, சமூக விடுதலையும் உருவாக்க வேண்டும், என்ற கம்யூனிஸ்ட்டுகள் முன் வைத்தது. மூன்றாவது அகண்ட பாரதத்தில், முஸ்லீம், கிருத்துவர், கம்யூனிஸ்ட்டுகள் போன்றவர்கள் இல்லாத ஆட்சி அமைப்பது, என ஆர்.எஸ்.எஸ் முன்வைத்தது. இந்த மூன்றில், மூன்றாவது கருத்தை, கப்பற் படை வீரர்கள் போன்ற போராளிகள் அங்கீகரிக்கவில்லை. காங்கிரஸ் பல போராட்டங்களுக்கு தலைமை ஏற்றது. கம்யூனிஸ்ட்டுகள், தேபாங்கா, தெலுங்கானா, கீழத்தஞ்சை, திரிபுரா, புன்னப்புரா வயலார், வோர்லி பழங்குடியினர், சென்னை, மும்பை, கொல்கத்தா நகரங்களின் தொழிலாளர்கள் என பலத்தரப்பட்ட மக்களின் பங்கேற்பை விடுதலை போரில் ஈடுபடுத்தினர். ஆனால் ஆர். எஸ்.எஸ். அவ்வாறு எந்த வரலாற்று தடையத்துடனும் இல்லை. மாறாக போராட்டங்களை காட்டி கொடுப்பது, சிறையில் இருந்து விடுதலை பெற மன்னிப்பு கடிதங்கள் அளித்து தண்டனையில் இருந்து விடுவித்து கொள்வது என்பதையும், இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரங்களை உருவாக்குவதையும் வாடிக்கையாக கொண்டிருந்த இயக்கம் ஆர்.எஸ்.எஸ் ஆகும். முஸ்லிம் லீக்கும், ஆர்.எஸ்.எஸ் உருவாக்கிய பகைமை உணர்வுக்கு எதிராக தனிநாடு கோரிக்கையை முன்வைத்ததன் விளைவு, விடுதலை பெறும் நாள்களில், தேச எல்லைகள் கொழுந்து விட்டு எரியும் சூழல் உருவானது. பிரிட்டிஷாருக்கு எதிராக உருவான மகா எழுச்சியை, பிரிட்டிஷார் செல்லும் போது, மத அடையாளத்தின் பெயரிலான நீடித்த பகைமையை உருவாக்கி சென்றனர். இதற்கு ஆர்.எஸ்.எஸ் அடிப்படை காரணம் என்பதை மறுக்க முடியாது. எனவே இன்றைய ஆட்சியாளர்களுக்கும், காலனியாதிக்கத்தில் இருந்து, இந்தியா பெற்ற விடுதலைக்கு அடிப்படையான போராட்டத்திற்கும் தொடர்பில்லை.
வளர்ச்சியும் நவகாலனியமும்:
இந்தியாவை பற்றி மார்க்ஸ் பல கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார். “இந்தியாவில் ஒரு பொற்காலம் இருந்தது, என்பதை நான் மறுக்கிறேன், இந்துஸ்தான் இதற்கு முன் பட்ட கொடுமைகள் எல்லாவற்றையும் விட, பிரிட்டிஷாரிடம் பட்ட துன்பமே மிக மோசமானது. உள்நாட்டு போர்கள், அந்நிய படை எடுப்புகள், பஞ்சம், சிக்கலான திடீர் அழிவுகள் போன்ற அனைத்தும் மேல் மட்டத்திலேயே நின்று விட்டன. இங்கிலாந்து தான் இந்துஸ்தான் சமூக அமைப்பை, சிதறடிக்கும் வகையில் தகர்த்து எறிந்து விட்டது. முந்தைய ஆட்சிகள் பொது பணி துறை மூலம், கால்வாய் வெட்டி, விவசாயத்தை வளர்த்தனர். ஆனால் ஆங்கிலேயே ஆட்சியாளர்கள் பொதுப்பணி துறையை கவனிக்கவில்லை. கிராம கைத்தொழிலான நெசவும் ஒழிக்கப்பட்டது. பெரும் திருடனான, ராபர்ட் கிளைவ் போன்றோர் கூட, சொந்த நாட்டில் சிறு ஊழலை கூட பொருத்து கொள்ளாதவர்கள் காலனி நாட்டில், அடக்கு முறைகளின் மூலம், பெரும் கொள்ளை அடித்தது நியாயமா? என கேள்வி கேட்டுள்ளனர்”, என மார்க்ஸ் இந்தியாவை பற்றியும், ஆங்கிலேயர்களின் ஆட்சி பற்றியும் கூறியுள்ளார்.
இன்று நவதாராளமயம் நவகாலனி ஆதிக்கத்தை இந்தியாவில் நிறுவியுள்ளது. இந்தியாவில் உள்ள அரசியல் விடுதலை கூட, பறிக்கப்படும் நிலைக்கு இந்த கொள்கை ஆதிக்கம் செலுத்துகிறது. இந்தியா விடுதலை பெற்ற போது, மார்க்ஸ் கூறியவாறு, பெரிய தொழிற்சாலைகள் இல்லை, நெசவு, நூற்பாலை மற்றும் கை வினைக் தொழில்கள் மட்டுமே நிறைந்திருந்தது. நவீன எந்திர தொழில்கள் அறவே இல்லை. கனரக, கேந்திர தொழில்களை துவக்குவது தான், இந்தியாவின் பின் தங்கிய நிலையை மாற்றவும், மக்களை பஞ்சம், பட்டினி போன்ற நிலையில் இருந்து காக்கவும் வழிவகுக்கும் எனக் கூறப்பட்டது. அன்றைய பிரதமர் நேரு மற்றும் எதிர்கட்சி அந்தஸ்தில் இருந்த கம்யூனிஸ்ட்டுகளான, ஏ.கே. கோபாலன், பி. ராமமூர்த்தி உள்ளிட்டோர், மிகக் கடுமையான முயற்சிகள் செய்து, அடிப்படை வளர்ச்சிக்கான மின்சாரம், இரும்பு உருக்கு மற்றும் சுரங்க தொழில்களை கட்டமைத்தனர். இது உண்மையான வளர்ச்சிக்கு திறவு கோல் என்றால் மிகையல்ல.
இன்று வளர்ச்சி என்பது வெறும் முழக்கமாக உள்ளது. வேலை வாய்ப்பு உருவாக்குவது குறித்து வாக்குறுதிகள் அளிப்பதும், பின்னர் அது ஜூம்லா (சும்மா) என வெட்கமற்ற உரையாடல்கள் நடத்துவதும் பாஜக ஆட்சியினரின் செயலாக உள்ளது. அரசு துறைகளில் பணியிடங்களை காலியாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தி மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பும் அரசாக பாஜக அரசு உள்ளது. ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்க இருப்பதாகவும், ஸ்கில் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற, மோடியின் வெற்று முழக்கங்கள் தற்போது அம்பலப் பட்டு நிற்கின்றன. வேலை வாய்ப்பற்ற வளர்ச்சியே எதார்த்தமான ஒன்றாக காட்சியளிக்கிறது. விடுதலை இந்தியாவில் வேலை உரிமை இருக்கும், என்ற நம்பிக்கையோடு இளைஞர்களை விடுதலை போரில் ஈடுபடுத்திய பகத்சிங், சந்திரசேகர ஆசாத், சூர்யா சென், கல்பனா தத், போன்ற எண்ணற்ற வீரர்களின் பற்றி எரியும் கனவுகளுக்கு பாதை அமைக்கும் பொறுப்பு, 73 ஆண்டுகள் முடிவுற்ற நிலையிலும் நீடிக்கிறது.
சாலைகள், கட்டிடங்கள், விமான நிலைய விரிவாக்கம் நாடாளுமன்ற கட்டிடம் என எல்லாவற்றிற்கும், பாஜக அரசு, உலக அரங்கில் கடன் கேட்டு நிற்பதும், ஊதாரித் தனமாக செலவிடுவதும், அதில் ஊழல் நடக்க உதவுவதும் ஊரறிந்த உண்மையாக உள்ளது. ரபேல் போர் விமான ஊழல் போபர்ஸ் பீரங்கி ஊழலை மிஞ்சுகிறது. லாபத்தில் இயங்கும் பொது துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதும், ஒன்றிய அரசுக்கு சொந்தமான ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் நிறுவனங்களை கூட, அந்நிய நேரடி முதலீட்டிற்கு திறந்து விடுவதும், அன்றாட காட்சிகளாக உள்ளன. நாடாளு மன்றத்தில் உள்ள பெரும்பான்மையை இந்த அடமான செயல்களுக்கு, அப்பட்டமாக பாஜக பயன்படுத்தி வருகிறது. பெகாசஸ் உளவு அதைத் தொடர்ந்த எதிர்கட்சிகளின் போராட்டமென நாடாளுமன்றம் போர்களமாக மாறியுள்ளது. இதைப் பயன்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு உதவிய, பொது காப்பீடு போன்றவற்றை விற்பனை சட்ட மசோதாக்களை விவாதம் இன்றி நிறைவேற்றி வருகிறது.
நாஜி கட்சி ஹிட்லர் தலைமையில், ஜெர்மனியில் ஆட்சியை கைபற்றிய போது, வங்கிகள், ரயில்வே, கப்பல் போக்குவரத்து மற்றும் துறைமுகம் மற்றும் நலத்திட்ட அமைப்புகள் அனைத்தையும் தனியாருக்கு தாரைவார்த்தது. அரசின் பணி இந்த நிறுவனங்களை நிர்வகிப்பதல்ல, என கூறப்பட்டது. 1934, 35 காலங்களில் பட்ஜெட் பற்றாக்குறைகளை போக்க ஹிட்லர் அரசு, அரசு நிறுவனங்களை தனியாருக்கு விற்று கிடைத்த தொகை கொண்டு ஈடு செய்ததாகவும், விக்கி பீடியா இணைய தளம் கூறுகிறது (Economy and Naji Germany). இன்றைய பாஜக ஆட்சியாளர்கள் மேற்படி ஹிட்லரின் கொள்கையை தான் பின்பற்றுகின்றனர். முதலாளிகள் கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சியே பிரதானமான ஒன்றாக உள்ளது. திலகர், பாரதி, வ.உ.சி போன்றோர் முழங்கிய சுதேசி உண்மையானது. பாஜக முழங்குவது, அரசியல் விடுதலையையும், நவகாலனி ஆதிக்கத்திற்கு அடமானம் வைக்கும் விதேசி என்பது தெளிவாகும்.
“இந்தியாவில் ஏற்படும் நவீன தொழில் வளர்ச்சியின் பயனை இந்தியர்கள் அனுபவிக்க முடியாது. ஆங்கிலேய பூர்ஷ்வாக்களை இந்தியாவில் இருந்து விரட்ட வேண்டும் அல்லது பிரிட்டனில் உள்ள பாட்டாளி வர்க்கம் பூர்ஷ்வாக்கள் ஆட்சியை ஒழிக்க வேண்டும். இவற்றில் ஏதாவது ஒன்று நடந்தால் ஒழிய நவீன தொழில் வளர்ச்சிகளின் பலனை இந்தியர்கள் அனுபவிக்க முடியாது என்பது தின்னம்”, என மார்க்ஸ் அன்றைய இந்தியா பற்றி கூறியதைப் போலவே, இன்றும், இந்திய பாட்டாளிகளின் நிலை உள்ளது. இதன் காரணமாகவே இன்றைய வளர்ச்சி பெரும்பான்மையான மக்களுக்கு அல்ல. மாறாக விஜய் மல்லையா போன்ற ஏமாற்று பேர்வழிகளுக்கும், பன்னாட்டு மற்றும் உள்நாட்டு ஏகபோக மூலதனத்திற்குமானதாக உள்ளது.
சமூக பகைமை வளர்க்கும் பாஜக:
மகாத்மா காந்தியும் ராம பக்தர், மோடியும் ராம பக்தர் எனும்போது, ராமர் எந்த பக்தரின் மரியாதையை ஏற்றுக் கொள்வார்? ஒருவர் நல்லிணக்கதிற்காகவும், மற்றொருவர் அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற கடவுளையும் அரசியலாக்குபவர் என்பதையும், அறியமுடியும். 1947, டிசம்பர் 2 அன்றைய காந்தியின் நிகழ்வுகளில் இரண்டு முக்கிய விஷயங்கள் இடம் பெற்றது. பவநகர் மகாராஜா காந்திக்கு அனுப்பிய தந்தியில், பவநகரில் உள்ள இந்துக்கள் விழிப்புடன் செயல்பட்டு, ரவுடிகள் மற்றும் முரடர்களிடம் இருந்து முஸ்லீம்களை பாதுகாத்தோம், எனக் கூறி இருந்தார். காந்தி இது குறித்து பேசும் போது, “நாம் வழிதவறி செல்கிறோம், என்பதை இந்து மகா சபாவிற்கும், ராஷ்டிரிய சுயம் சேவக் சங்குக்கும் மிகவும் மரியாதையுடன் தெரிவித்து கொள்கிறேன், இவ்வளவு உயரத்திற்கு எழுந்த இந்தியாவை இப்போது, புழுதியில் தள்ளப் போகிறோமா? நமது மதத்தையும், நாட்டின் சாதனைகளையும் அழிக்கப் போகிறோமா?” என வினவுகிறார். இது தெரிவிக்கும் செய்தி உண்மையான மத நம்பிக்கையாளர் பிற மத நம்பிக்கையாளர் மீது வெறுப்போ, துவேசமோ கொள்வதில்லை, என்பதே ஆகும். ஆனால் அன்று முதல் இன்று வரை பாஜக துவேசம் மற்றும் வெறுப்பு அரசியல் மூலமாகவே வளர்ந்து வருகிறது. இதன் காரணமாக, தற்போதைய பாஜக ஆட்சி காலத்தில், 4000 க்கும் அதிகமான மத அடையாளம் காரணமான தனிநபர் தாக்குதல்களில் 400க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். 9000 பேர் மரணத்துடன் போராடி உள்ளனர்.
இரண்டாவது, அதே நாளில் காந்தி பானிபட்டில் இருந்த முஸ்லிம் அகதிகள் முகாமில் பேசியது. அங்கிருந்த முஸ்லிம் அகதிகளானவர்கள், தாங்கள் பாகிஸ்தான் செல்ல விரும்புவதாக தெரிவித்த கருத்துக்களுக்கு காந்தியின் விளக்கம். அதாவது ராணுவத்தை வெளியேற்றி இந்துக்கள் எங்கள் சகோதரர்கள் அவர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு, என தெளிவாக கூறுங்கள், ஏனென்றால் இது உங்கள் இல்லம், என கூறியுள்ளார். மேலும் அன்றைய பிராத்தனையில் கூடியவர்களிடம், நான் ராமராஜ்ஜியம் அமைக்க விரும்புகிறேன், உங்கள் உதவி இல்லாமல், எப்படி சாத்தியம்? என வினவுகிறார். இவை அனைத்தும் தனது வழிபாட்டு முறையை அரசியலாக்காமல், அவரவர் நம்பிக்கை அவரவர் உரிமை என்ற உயரிய ஜனநாயகத்தையும், மதசார்பற்ற தேச பற்றையும் வலியுறுத்துகிறது. இங்கு தஞ்சம் கேட்கும் அவலம் என்ற வறட்டு வாதத்திற்கு இடமில்லை, என்பதே உண்மை.
இன்று குடியுரிமைச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, போன்ற பெயர்களில், இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களை வெளியேற்றி நாடற்றவர்களாக்க பாஜக ஆட்சியாளர்கள் செயல்படுவதைக் காணமுடிகிறது. இஸ்ரேல் பாலஸ்தீனர்களை வெளியேற்றி நாடற்றவர்களாக்க முயற்சிப்பதைப் போல், இந்தியாவில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்களின் முயற்சியைக் காண முடிகிறது. உணவு துவங்கி திருமணம் வரை இஸ்லாமிய பழக்க வழக்கங்களை அவமதிப்பது, அதற்காக தாக்குவது, தண்டிப்பது, போன்ற இழிவான செயல்களில் ஈடுபடுகின்றனர். காஷ்மீரத்து தீவிரவாதிகளை எதிர்த்த அரசியல் பின்னுக்கு தள்ளப்பட்டு, காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாத செயல்களுக்கு ஊக்கம் அளிக்கும் நடவடிக்கைகளை அதிகப் படுத்தி உள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் 35.71 சதம் அளவிற்கு காஷ்மீரில் சாதாரண குடிமக்கள் கொல்லப் பட்டிருக்கும் அவலம் காஷ்மீரில் நிலவுகிறது. 176 சதம் அளவிற்கு தீவிரவாத செயல்கள் அதிகரித்து உள்ளன. இவை அனைத்தும் மத அடையாளம் காரணமான துவேசம் தவிர வேறில்லை.
இதே அளவிற்கு தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறையும் அதிகரித்து உள்ளது. பீமாகோரேன் 200 ஆம் கொண்டாட்டம், அதை ஒட்டிய துப்பாக்கி சூடு, பின்னர் அறிவுஜீவிகள் உள்ளிட்ட செயல்பாட்டாளர்கள் மீதான வழக்கு, சிறையில் அடைப்பு, ஸ்டான்சாமி மரணம் ஆகியவை உச்ச பட்சம் ஆகும். 2016 கணக்குபடி, பாஜக ஆட்சி காரணமாக தலித்துகள் மீதான தாக்குதல்கள் 25 சதம் அதிகரித்துள்ளது, என தேசிய குற்ற ஆவண காப்பகம் கூறுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் தலித் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் இரட்டிப்பாகியுள்ளது. தலித்துகள்மீது பதிவு செய்யப்பட்ட காவல் துறை வழக்குகள் 2015 ல், 38670. 2016 ல் 40801. இந்த எண்ணிக்கை பாஜக ஆளும் மாநிலங்களான, பீகார், உ.பி, ராஜஸ்தான், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இன்னும் பல மடங்கு அதிகம். இதைத் தொடர்ந்து, 2016 க்கு பிறகான விவரங்கள் வெளியிடுவதை அரசு நிறுத்தி விட்டது. அதே நேரம் தலித்துகள் அளிக்கும் புகார் பதிவு செய்யப் படுவதில்லை. கிடப்பில் போடப்பட்ட வழக்குகள் 99 சதம் என்பது பெரும் அதிர்ச்சியான ஒன்றாகும். இவை அனைத்திற்கும், பாஜக தலைமையின் வர்ணாசிரமம், இதர மனுவாத தத்துவம் ஆகியவையே காரணம் ஆகும். படிப்படியாக வளர்ந்த ஒற்றுமை மூலம் பெற்ற அரசியல் விடுதலை, தேசம் போன்ற அடையாளங்களை, சாதி, மத அடையாளங்கள் மூலமும், நவகாலணி ஆதிக்கத்திற்கு உதவுவதன் மூலமும், சிதைக்கும் வேலையில் பாஜக ஈடுபட்டு வருகிறது.
மார்க்சிஸ்ட் கட்சி தனது திட்டம், பாரா5.9 ல், “முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் கலவரங்கள் நிரந்தரமாகி விட்டது. கிருத்துவ மக்களையும் குறி வைத்து தாக்கி வருகிறது. இதனால் சிறுபான்மை மக்களிடையே அந்நியப்படுத்தப் படும் உணர்வும், பாதுகாப்பற்ற உணர்வும் அதிகரிக்கிறது. மேலும் பழமைவாத போக்குகள் தோன்றி, மதசார்பின்மையின் அடித்தளம் பாதிக்கப்படுகிறது”, என கூறுகிறது. பாரா 5.12,” சாதிய ஒடுக்குமுறை முதலாளித்துவத்திற்கு முந்தைய நிலப்புரபுத்துவ கட்டதிலேயே, ஆழமாக வேறூன்றி விட்டது. தற்போதைய முதலாளி வர்க்கம், இந்த சாதிய பாகுபாடுகளை வளர்த்து, ஒடுக்குமுறைக்கும் உதவுகிறது. சமுக சீர்திருத்தம் மூலம் சாதிய முறை மற்றும் அதன் அனைத்து வடிவிலான, சமூக ஒடுக்குமுறையை எதிர்த்து போராட வேண்டியுள்ளது. இது ஜனநாயக புரட்சியின் முக்கிய கடமையாகும். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம், வர்க்க சுரண்டலுக்கு எதிரான போராட்டத்துடன் பின்னி பினைந்தது ஆகும்”, எனக் கூறுவதை கவனத்தில் கொள்வதே கள செயல்பாட்டாளர்களுக்கு ஊக்கம் தரும் ஒன்றாகும்.
மாநிலங்களின் ஒன்றியமா? பேரரசா?:
இது பட்டிமன்ற தலைப்பு அல்ல. பாஜக 2014 ல் ஆட்சிக்கு வந்தபின், மாநிலங்களின் உரிமைகளை பறிப்பது அதிகரித்துள்ளது. நவதாராளமய கொள்கைக்கு அதிகார குவிப்பு தேவையாக உள்ளது. எனவே மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து மத்திய அரசின் நேரடி கட்டுப் பாட்டிற்குள் அல்லது, பொதுபட்டியலில் வைத்து மாநிலங்களின் உரிமையை பறிப்பது, மக்களை வஞ்சிப்பது அதிகரித்து வருகிறது. ஆளுநர் நியமனம் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில ஆட்சியாளர்களை நிர்பந்தம் செய்வது பெருமளவில் அதிகரித்துள்ளது. பரப்பில் சிறிய மாநிலங்களில், பாஜக ஆட்சியை பிடிக்க உதவும் வகையில், அதிகார திணிப்பு, குதிரைப் பேரம் போன்றவை ஆளுநர்கள் செய்தது பகிரங்கமாக வெளிப்பட்டது.
இந்தியா அரசியல் சட்டத்தை கட்டமைக்கும் போது, பலநாடுகளின் வடிவங்களை எடுத்து கொண்டது. அரசின் கடமைகளை நிறைவேற்ற சோவியத் யூனியனை பின்பற்றியது. அதன் மூலம் உருவான திட்டக் குழுவை களைத்து, நிதி ஆயோக்கின் அதிகாரத்தை பலப்படுத்தி உள்ளது. இது மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பை உருவாக்கி வருகிறது. ஜி.எஸ்.டி மூலம் மாநிலங்களின் நிதி ஆதாரத்தை வெட்டி சுருக்கி உள்ளது. இயற்கை பேரிடர் காலங்களுக்கு மத்திய அரசின் உதவி அறவே இல்லை, என்ற உண்மையை தமிழ்நாட்டின் அனுபவத்தில் இருந்து நன்கு அறிய முடியும். பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கான ஒதுக்கீடுகள் அதிகரித்தும், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப் படுவதும் அண்மைக்கால நிகழ்வுகளாக உள்ளது.
அதேபோல் கல்வி துறை அந்நிய பல்கலைக் கழகங்களுக்கு அனுமதி, தேசிய கல்வி கொள்கை வரையறை, மொழி பாடங்களில் செய்யும் மேலாதிக்கம் என பல வகையில் அதிகார குவிப்பு வெளிப்பட்டு வருகிறது. இதன் மூலம் கல்வி தனியார் ஏகபோக நிறுவனங்களின் வேட்டைக்காடாக அதிகரிக்கும் வழிவகையை செய்கிறது பாஜக. சுகாதார கொள்கையும் இது போல் மாற்றப்பட்டு வருகிறது. நீட் தேர்வு ஒரு உதாரணம் மட்டுமே. அடிப்படை சுகாதாரம், இந்த கோவிட் காலத்தில், சீரழிந்து நிற்பது எதார்த்தம். பொதுத்துறை நிறுவனங்களில் தடுப்பூசி தயாரிக்க முடியும் என்ற நிலையிலும், தனியாருக்கு ஏலம் விட்டு, வேடிக்கை பார்ப்பது தாராளமய கொள்கைக்கு தேவைப்படும் அணுகுமுறை என்பதை பாஜக தெளிவு படுத்துகிறது.
தன்னாட்சி அந்தஸ்து கொண்ட நீதி, நிர்வாகம், ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம், சி.பி.ஐ, ஆராய்ச்சி நிறுவனங்கள் அனைத்தும் அதிகாரம் இழந்து உத்தரவுக்கு அடிபணியும் நிறுவனங்களாக மாறி இருப்பது, பெரும் ஆபத்து ஆகும். இந்திய அரசியல் அமைப்பின் முகப்புரையில் இறையாண்மை உடைய மக்களாட்சி, சமதர்ம, சுதந்திர குடியரசு என்றும் இந்தியா பெயரிடப்பட்டுள்ளது. இந்தியா ஒரு கூட்டாட்சி நாடாகும், இருப்பினும் கூட்டாட்சி என்ற சொல்லிற்கு பதிலாக ஒன்றியம் என்று தான் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் பாஜக ஆட்சியாளர்கள் ஒரு பேரரசாக தங்களை முன்னிறுத்தும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சிந்தனையின் வெளிப்பாடே நாடாளுமன்றம் கூடும் நாள்களின் எண்ணிக்கையை குறைப்பதும், விவாதமற்ற மசோதாக்கள் நிறைவேற்றமும், பிரதமர் ஊடகங்களை சந்திக்க மறுப்பதும் ஆகும்.
எனவே இந்திய விடுதலைப் போரில் முன் வைக்கப் பட்ட, அரசியல் விடுதலையை நவகாலனியாதிக்கத்திடம் அடமானம் வைப்பதை தடுக்க வேண்டியுள்ளது. சமூக விடுதலைக்கான போராட்டத்தை உழைப்பு சுரண்டலுக்கு எதிரான போராட்டத்துடன் இணைத்து, ஜனநாயக புரட்சியை வெற்றி பெற செய்ய வேண்டிய கடமை அதிகரித்துள்ளது. மதசார்பின்மை, ஜனநாயகம் ஆகியவற்றை சொல்லாடல்களில் இல்லாமல் உண்மையில் அனுபவிக்கும் நாடாக வளர்ச்சி பெற செய்ய வேண்டியுள்ளது. இவை பாஜக ஆட்சிக்கு வராமல் தடுப்பதில் முதல் கட்டமாகவும், ஜனநாயக சக்திகள் மட்டுமல்லாது இடதுசாரிகளின் வளர்ச்சியுடன் சட்டம் இயற்றும் மன்றங்களின் செயல்பாடு அமைவது இரண்டாம் கட்டமாகவும் இருக்க முடியும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சுட்டி காட்டும் மக்கள் ஜனநாயக அரசுக்கான போராட்டம் தீவிரம் பெறுவதே, இந்திய விடுதலைக்கான முழுமையாக இருக்க முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக