புதன், 27 ஏப்ரல், 2022

 வெறும் நிகழ்வல்ல… போராட்டங்களில் துளிர்த்த மரம்…

எஸ். கண்ணன்


நூற்றி இருபது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ரஷ்ய நாவல் தாய், மார்க்சீம் கார்கி எழுதியது. தமிழகத்தின் மறைந்த முதல்வர் கலைஞர் உற்சாகமாகி, தமிழில் 2000 ஆண்டு துவக்கத்தில் கவிதையாக படைத்த நூல். காரணம் கொடிய சுரண்டல்கள் அரங்கேறிய ஆலைகளில், நீதி கேட்கும் போராட்டங்களும், அதற்கு காராணமானவர்கள் தண்டிக்கப்படுவது, சிறையில் அடைக்கப்படுவது வாடிக்கையாக மாறிய சூழல், நாவலில் இடம் பெறும் அந்த நாவலின் கதாநாயகன் பாவெல், அவன் தாய் பெலகய்யா நீலவ்னா, இருவரின் பணியும், புரட்சிகர செயல்பாட்டாளர்களுக்கு மிகுந்த உணர்ச்சியையும், வேகத்தையும், அறிவுப் பூர்வமான துணிவையும் அளித்ததாக கதை போக்கு இருக்கும். 


எத்தனையோ தாய்கள் தங்கள் மகன் அல்லது மகள் நடத்தும் போராட்டங்களில் உளவியல் ரீதியில் தாக்கம் ஏற்படுத்துவதுடன், போராடுவதற்கான திடத்தை வழங்கி வருகின்றனர். அண்மையில் அமெரிக்க நாட்டின் பெரிய வணிக நிறுவனம் அமேசான், அதன் முதலாளி ஜெப் பெசோ வளிமண்டலத்தை 11 நிமிடங்களில் சுற்றுலா பயணியாக சுற்றி வந்தவர். அதற்காக பல கோடி ரூபாய் செலவிட்டவர். அதைத் தொடர்ந்து வளிமண்டல சுற்றுலாவை நடத்தும் பெரும் நிறுவனமாக மாறியுள்ளது. கொரானா காலத்தில் பல லட்சம் கோடி லாபம் ஈட்டிய நிறுவனம் அமேசான். ஆன்லைன் வர்த்தகத்தில் உலகின் முதல்பெரும் நிறுவனமாக, உலகெங்கும் கிளை பரப்பி செயல்பட்டு வருகிறது.  16, 08,000 தொழிலாளர்கள் இங்கு பணி புரிகின்றனர். 


இங்கு அமேசான் தொழிலாளர் சங்கம் (Amazon Labour Union) உருவானதும், அதை ஒடுக்க நிறுவனம் முயற்சித்ததும் பெரும் செய்தியாக ஓராண்டுக்கு மேல் வலம் வந்தது. தொழிற்சங்கம் அமைக்க முயற்சித்த ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். வழக்கம் போல் முதலாளித்துவம் தனது பிரித்தாளும் சூழ்ச்சியை அரங்கேற்றியது. தொழிற்சங்க ஆதரவு, எதிர்ப்பு என்ற சிந்தனையை, தொழிலாளர்களிடம் விதைத்தது. கருப்பு, வெள்ளை நிறவெறி உள்ளிட்டு ஆதிக்கம் செலுத்தி உள்ளது. அதன் காரணமாக ஜே.எப்.கே.8 என்ற ஒரு இடத்தில் உள்ள குடோனை மையப் படுத்தி செயல்படும் தொழிலாளர்களுக்குள் நடத்திய வாக்கெடுப்பில், சுமார் 6000 தொழிலாளர்களில், 4785 தொழிலாளர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். அவர்களில் 2654 பேர் தொழிற்சங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். நெடிய போராட்டத்தின் வெற்றியாக வாக்கெடுப்பு மூலம் தொழிற்சங்கம் அங்கீகாரம் பெற்றுள்ளது. 


இதன் முக்கிய காரணகர்த்தாவான கிரிஸ்து ஸ்மால் என்ற இளைஞர். அவர் வேலைநீக்கம் செய்யப்பட்டு, மன உலைச்சலுக்கு ஆளானார். அவரின் மன உலைச்சலுக்கு ஆறுதல் தந்து, போராடும் ஊக்கத்தை அளித்தவர், அவர் தாய். தாய் நாவல் நூறாண்டுகளை கடந்து வேறு தளத்தில், வேறு தொழிலில், வேறு அடையாளத்தில் பயணிப்பதைக் காண முடிகிறது. 


ஸ்டார் பக்ஸ் காபி ஷாப்:


மறைந்த தோழர். வி.பி.சிந்தன் ஓட்டல் தொழிலாளர்களிடம் பேசிய காணொளிக் காட்சியை அண்மையில் காணும் வாய்ப்பு கிடைத்தது. அவர் பேசிய ஐந்து நிமிடங்களில் ஓட்டல் தொழிலாளர்களை சென்னை நகரில், அணி திரட்டிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். சிறையும், தலைமறைவு வாழ்க்கை நடத்த வேண்டிய போராட்ட களமும் ஓட்டல் தொழிலாளர்களை தொடர்ந்து அணி திரட்ட தடையாக இருந்தது என்பதை பதிவு செய்கிறார். 


அமெரிக்காவின் ஸ்டார் பக்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும், 32660 கடைகளை கொண்ட பெரும் காபி மற்றும் உணவு விநியோகம் செய்யும் நிறுவனமாக உள்ளது. 3,80,000 ஊழியர்கள் உலகம் முழுவதும் பணி புரிகின்றனர். இந்தியாவில் 1200 ஊழியர்கள் பணிபுரிவதாக விவரங்கள் தெரிவிக்கிறது. இந்த நிறுவனத்திலும் தொழிற்சங்கம் துவங்கி பெரும் அடக்கு முறையை சம்மந்தப் பட்ட தொழிலாளர்கள் எதிர் கொண்டு வருகின்றனர். 


அமெரிக்காவில் கடந்த டிசம்பர் முதல் தொழிற்சங்கம் அமைக்கவும் அதை அங்கீகரிக்க வேண்டும் எனவும் கேட்டு, தொழிலாளர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். 1965 காலத்தில் தொழிற்சங்கம் வேண்டும், அது அங்கீகரிக்கப்பட வேண்டும், என்ற கோரிக்கைகளுக்காக, 68 சதம் பேர் அன்று போராடினார்கள். இன்று அதே கோரிக்கைக்காக 77 சதம் போராடுவதாக நிலை உள்ளது, என்று வரலாற்று பேராசிரியர் ஜோசப் மெக்கார்ட்டின், ஸ்டார் பக்ஸ் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். குறிப்பாக 18 வயது முதல் 34 வயதுக்குட்பட்ட ஊழியர்கள் இது போன்ற கோரிக்கைகளை முன் வைத்து போராடுவது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். புதிய தலைமுறை இளைஞர்கள் நாங்கள் U (U for Union) விற்குபின் அணிவகுப்போம் என்கின்றனர். இந்த அமைப்பின் முக்கிய பிரதிநிதிகள் அனைவரும் பெண்கள் என்பதும் கவனிக்க தக்கது. ஏனென்றால் 70 சதம் தொழிலாளர்கள் பெண்களாக உள்ளனர். 


ஒரு மணி நேரத்திற்கு 17 அமெரிக்க டாலர் ஊதியம் (1258 ரூபாய்) பல காப்பீடு, கல்வி உதவி போன்றவை இருந்தாலும், தொழிற்சங்கம் அவசியம் எனக் கூறுகின்றனர். நிரந்தர வேலை இல்லை, பல நிறுவனங்களில் பணி புரியும் உதிரி பாட்டாளிகளாக மற்றப் பட்டு இருக்கிறோம். இவை மிகுந்த மன உலைச்சல் தருவதாக உள்ளது எனக் கூறுகின்றனர். நிதி மற்றும் வாழ்க்கை உத்தரவாதம் பாதுகாப்பற்றதாக உள்ளது என்கின்றனர். என்னுடைய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிட முடியவில்லை. வேலைக்கும் வீட்டிற்கும் சென்று வருகிறேன், என லியோ ஹெர்னாண்டஸ் என்ற இளம் தொழிலாளி கூறுகிறார். 


நிறுவனம் தொழிற்சங்கமாக ஊழியர்கள் ஒன்று சேர்வதை விரும்பவில்லை. ஏனென்றால் எங்களை துரத்தும் அவர்களின் எண்ணம் ஈடேறாமல் போகும். எங்களை ஜனநாயக ரீதியில் நடத்தினாலும் அல்லது நல்ல ஊதியம் அளித்தாலும் அது நிரந்தரமல்ல என்பது பிரச்சனை தானே, என்கிறார். நியான் பேனட் என்ற 22 வயது பெண் ஊழியர். இது தான் இன்றைய மூலதன சுரண்டல் அளிக்கும் வேலை வாய்ப்பாக உள்ளது. 


ஏன் மேற்படி இரு தொழிற்சங்கங்களும் கொண்டாட படுகின்றன?


தமிழகத்தில், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், பன்னாட்டு ஆலைகளில் சங்கம் வைத்த போதும், இது போன்ற பாதிப்புகளை நமது தொழிலாளர்கள் சந்தித்துள்ளனர். அடக்கு முறைக்கும், வேலைநீக்கத்திற்கும் ஆளாகி உள்ளனர். நாம்  வெற்றியும் பெற்றுள்ளோம். இது நிலபிரபுத்துவ ஆட்சியாளர்களையும் நிர்வாகங்களையும் கொண்ட நாடு. நாம் சந்தித்த அடக்குமுறை இந்த அளவு வெளி உலகில் பேசப் படவில்லையோ என கருத தோன்றுகிறது. 


ஆனால் தனி மனித உரிமை, இன்னும் நாகரீக சமூகம் என பல வகையில் அமெரிக்க அரசு சொல்லிக் கொள்கிறது. அங்குள்ள உரிமைகள் பெரிய விஷயமாக நமது நாட்டில் பேசப்பட்டாலும், அங்கு தொழிலாளர் உரிமை பறி போவது அநாகரீகத்தின் உச்சம் தானே என்பதை அம்பலப்படுத்த வேண்டியுள்ளது. சுதந்திர தேவியின் சிலை நியூயார்க் நகரில் அமைந்துள்ளது. உலகின் ஏழு அதியசங்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது. எட்டு மணி நேர வேலைக்கான மே மாத போராட்டம், அடக்க பட்ட அதே 1886 ஆண்டு, அக்டோபர் மாதம் சுதந்திர தேவி சிலை அமைக்கப் பட்டுள்ளது. இது அன்றைய அமெரிக்காவின் இரட்டைத் தன்மையை வெளிப்படுத்துகிறது. அது போல் தான் இன்றும் ஒரு புறம் அனைத்து உரிமைகளும் உள்ளது. மறுபுறம் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை கூட மறுக்கப் படுவதும், ஒடுக்கப்படுவதும், வேலை நீக்கம் செய்யப் படுவதும் அமெரிக்காவில் அரங்கேறுகிறது. இதை அம்பலப் படுத்தும் போராட்டங்களாக அமேசான் மற்றும் ஸ்டார் பக்ஸ் தொழிலாளர்களின் தொழிற்சங்கம் அமைக்கும் பணி பார்க்கப் படுகிறது.


இது உலகம் முழுவதும் நடைபெறும் கருத்து வெளிப்பாடுகளாக பார்க்க முடியும். இந்திய ஆட்சியாளர்களின் வளர்ச்சி முழக்கம், இரட்டைத் தன்மை கொண்டது. அது முதலாளிகளின் வளர்ச்சிக்கானது என்பது அம்பலபட்டு உள்ளது. சமூகத்தை வளர்த்தெடுத்த பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் வளர்ச்சி, என தொழிற்சங்க போராட்டங்கள் நிருபித்துள்ளன. அதேபோல் திராவிட மாடல் என்ற வியாக்கியானங்களும் ஒரு சில சமூக போராட்டங்களை பாதுகாத்தாலும், ஒரு எல்லையில் முதலாளித்துவத்தை பாதுகாக்கும் கருவியாகவே இருக்கும். முதலாளித்துவ உழைப்பு சுரண்டலை நியாய படுத்தும் வகையிலேயே, புதிய முழக்கங்கள், நாகரீகமான சொல்லாடல்கள் கையாள படுகின்றன. 


மற்றொரு புறம் மூலதன குவிப்பு, நிரந்தரமற்ற வேலை வாய்ப்பை அதிகரிக்கிறது. ஆலைகளில் வேலை வாய்ப்பை குறைத்து காண்ட் ராக்ட் போன்ற உதிரி பாட்டாளி வர்க்க எண்ணிக்கையை அதிகப் படுத்துகிறது. அமைப்புசாரா தொழிலாளர்களாக படித்த நவீன தொழிலாளர்கள் உள்ளனர். யார் முதலாளி? எங்கிருக்கிறார்? நாம் தனித்தனியே வேலை செய்கிறோம், குறைவான எண்ணிக்கையில் இங்கு உள்ளோம் போன்ற கருத்துக்களால், அணிசேர்வது தள்ளிப் போகும் நிலையை அமேசான் மற்றும் ஸ்டார் பக்ஸ் தொழிலாளர்களின் போராட்டங்கள் உடைத்து நொறுக்கியிருக்கிறது. 


முதலாளிகளால் சிதறடிக்கப் பட்ட தொழிலாளி வர்க்கம், முதலாளிகளின் அடக்குமுறைகளால் ஒன்று சேர்க்கப் படும் என்ற கூற்று உண்மையாகி உள்ளது. அமேசான் தொழிலாளர்கள் மிக நீண்ட போராட்டத்தை நடத்தி உள்ளனர். அவர்கள் வேலைநீக்கம் செய்யப் பட்ட போது, உலகம் முழுவதும் அமேசான் மூலம் பொருள்களை வாங்கும் வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு, நிறுவனத்திற்கு நெருக்கடியை உருவாக்கியது, போன்ற பல போராட்டங்கள் நமக்கு ஒரு பாடமாக உள்ளன. வெறும் தொழிற்சங்கம் அமைக்கும் நிகழ்வல்ல. போராட்டங்களில் துளிர்த்த மரம், தொழிலாளி வர்க்கம் கொண்டாடுவோம்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக