டாலருக்கு நிகரான
ரூபாய் வீழ்ச்சி ஏன்?
எஸ். கண்ணன்
ஒருநாட்டின்
பொருளாதாரத்தை அந்த நாடு மட்டும் தீர்மானிக்கும் அதிகாரம் வீழ்ந்து ஆண்டுகள் பலவாகி
விட்டது. அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் மேலாதிக்கம், வளரும் நாடுகளின்
பொருளாதாரத்தை தீர்மானிப்பதாக மாறி வருகிறது. அப்படி ஆதிக்கம் செலுத்த நாணய பரிவர்த்தனை
முக்கிய பங்குவகிக்கிறது. ஏகாதிபத்திய நாடுகளின் நாணய மதிப்பிற்கு இணையான வளரும் நாடுகளின்
நாணய மதிப்பு குறையும் என்றால், விலை உயர்வு அதிகரிப்பு ஏற்படும். இது வளரும் நாட்டு
ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்க கூடியதாக உருமாறுகிறது.
எப்போதில்
இருந்து டாலர் ஆதிக்கம் துவங்கியது?
அமெரிக்காவின்
நாணய மதிப்பு டாலர். இது சர்வதேச நாணய பரிவர்த்தனையில் ஆதிக்கம் செலுத்த துவங்கியது
இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் தான். அதுவரையில் தங்கம் தான் சர்வதேச அளவிலான பரிவர்த்தனைக்கு
பயன்பட்டு வந்தது. 1944ல் அமெரிக்காவின் நியு ஹேம்ஸ்பயரில் உள்ள பிரட்டன் உட்ஸ் என்ற
நகரில், 44 நாடுகளின் கூட்டத்தில், பரிவர்த்தனைக்கு அமெரிக்காவின் டாலரை பயன்படுத்த
தீர்மானிக்கப் பட்டது. இது படிப்படியாக உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்துவதாக மாறியது.
அந்த சமயத்தில் இந்தியா பிரிட்டிஷாரிடம் காலனிஆதிக்க நாடாக இருந்த காரணத்தால், இந்தியாவிற்கு
சுயமான கொள்கை முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை. அது இன்றளவிலும் பிரதிபலிக்கிறது.
1947ல்
இந்திய ரூபாயின் மதிப்பு ரூ 4.16 என ஒரு டாலருக்கு நிகராக இருந்துள்ளது. பிரட்டன் வுட்ஸ் மாநாட்டில் சர்வதேச
நிதிமுனையம் (ஐ.எம்.எப்) மற்றும் உலக வங்கி அமைப்புகள் உருவான பின்னணியில் வளரும் நாடுகளுக்கான
கடன் வசதி மேலோங்குகிறது. நாடுகளை கடன் வலையில் சிக்கவைத்து, அவைகளின் பொருளாதாரத்தை
பின்னுக்கு தள்ளிய வரலாறாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வரலாறு அமைந்துள்ளது. இதில்
அமெரிக்க நாணயமான டாலருக்கு மாபெரும் பங்கு இருக்கிறது.
உலக
நாணய மதிப்பில் அமெரிக்க டாலர் 10வது இடத்தில்
உள்ளது. குவைத்தின் தினார், பிரிட்டனின் பவுண்டு, ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரோ ஆகியவை
டாலரை விடவும் வலுவாக இருந்தாலும், உலக நாடுகள் மத்தியில் டாலரின் பரிவர்த்தை மேலோங்கி
இருப்பதற்கு காரணம் ஐ.எம்.எப் போன்ற அமைப்புகளாகும். ஃபெடரல் ரிசர்வ் பேங்க் மூலமான
பரிவர்த்தனையை உலகின் மிக முக்கியமான 59 வளரும் நாடுகள் மேற்கொள்வதால், அமெரிக்காவின்
டாலர் மேலாதிக்கம் செலுத்துகிறது.
பங்குசந்தை
வீழ்ச்சி காரணமா?
இப்போது
இந்திய பங்கு சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்ட காரணத்தால் ரூபாய் மதிப்பு, டாலருக்கு நிகராக
வீழ்ச்சியடைந்து வருகிறது என்ற வாதத்தை முன்வைக்கின்றனர். அப்படியானால் அமெரிக்காவின்
பங்குசந்தை வீழ்ச்சி அடைந்த போது ஏன் அமெரிக்காவின் டாலர் மதிப்பு குறையவில்லை? 2008ல்
ஏற்பட்ட அமெரிக்க பொருளாதார பெருமந்தம் உலகப் பெருமந்தமாக மாறிய நிலையில் அமெரிக்காவின்
டாலர் மதிப்பு பெரும் வீழ்ச்சியை சந்திக்கவில்லை, இது இன்றிலிருந்து 14 ஆண்டுகள் வரலாறு
கொண்ட நிகழ்வு. ஏறத்தாழ நம் சமகால வரலாறு.
2008ல்
அமெரிக்க பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்து, வேலையின்மை அதிகரிப்பு, விலைவாசி உயர்வு,
அமெரிக்கா உலக நாடுகளில் செய்த முதலீட்டை திரும்ப பெற்றுக் கொள்வது போன்ற நிகழ்வுகள்
அரங்கேறின. ஆனால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 2007ல் 41.73
ஆக இருந்தது, 2008ல் 43.51 ஆக குறைந்தது. அதைத் தொடர்ந்து 2009ல் 48.41 ரூபாயாக பெரும்
சரிவை சந்தித்தது. அப்போது இந்திய பங்கு சந்தையின் வீழ்ச்சி, அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில்,
மிகக்கடுமையாக இல்லை என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
ஜூலையில்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 79,87 என வரலாறு காணாத வகையில் சரிவை சந்தித்துள்ளது.
இது அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு எளிய தொகையாகவும், இந்திய மதிப்பிற்கு மிக அதிகமாகவும்
தோற்றம் தரும். நீடித்த வளர்ச்சிக்கு இந்த முதலீடுகள் பலனளிக்காது. மேலும் இந்தியாவில்
இருந்து வெளியேறும் போதும் நாம் அதிக டாலரை இழக்கும் நிலை ஏற்படும். அது மேலும் நமது
ரூபாயின் மதிப்பை சரிக்கும் என்பதே மிகுந்த ஆபதானதாகும்.
அந்நிய
கடன் ஒரு காரணமா?
இந்தியா
ஐ.எம்.எப் மற்றும் உலக வங்கி போன்ற அமைப்புகளிடம் பெற்ற கடனுக்கும் ரூபாய் மதிப்பு
சரிவிற்கும் தொடர்பு உண்டா என்ற கோணத்திலும், இதை அணுக வேண்டியுள்ளது. ஐ.எம்.எப் மூலம்
13.4 டிரில்லியன் டாலர் கடன் பல நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகை ரூபாய் மதிப்பில்
பத்து கோடியே 38 லட்சத்து 31ஆயிரம் கோடி ஆகும். இது இந்தியாவின் ஆண்டு பட்ஜெட்டுடன்
கணக்கிட்டால், 20 மடங்கு அதிகமான தொகை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இந்தியாவிற்கான
வருவாயில் 45 சதமானம் வட்டிக்கு செலுத்துவதாக, பட்ஜெட் வாசிக்கும் போது, நிதி அமைச்சர்
நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். இது மேலும் 15சதம் அடுத்த நிதி ஆண்டில் அதிகரிக்கும்
எனவும் ஆரூடம் கூறியுள்ளனர், நிதிதுறை வல்லுநர்கள். இது ரூபாயின் மதிப்பை மேலும் மேலும்
சரிக்கிறது. தமிழ்நாடு அரசின் சுமார் 6.5 லட்சம்
கோடி ஆகும். இந்திய அரசிற்கு 620.7 பில்லியன் அமெரிக்க டாலர், சுமார் 50 லட்சம் கோடி
ரூபாய் அந்நிய கடன் உள்ளது.
ஐ.எம்.எப்
மற்றும் உலக வங்கி அமைப்புகளிடம் கடன் பெற துவங்கிய பின் தான், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு பெரும் சரிவை சந்தித்தது. கடன்
அளவு இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதால் டாலரில் தொகை அதிகரிக்கிறது. இதன் காரணமாக
வட்டியும், அசல் தொகையின் அளவும் அதிகரிப்பது, இந்திய அரசுக்கு இரட்டை சுமை என்பதை
உணர்வதில்லை. இது உண்மையில் இந்தியப் பொருளாதாரத்தை மிகக் கடுமையாக பாதிக்கும் நடவடிக்கை
ஆகும்.
ரூபாய்
மதிப்பு சரிவு சமூகத்தில் ஏற்படுத்தும் விளைவு:
டாலருக்கு
நிகரான ரூபாய் மதிப்பு குறைவதன் காரணமாக, பொருள்கள் மீதான விலையேற்றத்தை ஏற்படுத்துகிறது.
இதை பணவீக்கம் (inflation) என்கின்றனர். இது இறக்குமதி செய்யப் படும் பொருள்களின் விலையை
பலமடங்கு அதிகரிக்கிறது. அதேநேரம் நமது நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யும் பொருள்களின்
விலை பல மடங்கு குறைவாக இருக்கிறது. இது ஏகாதிபத்திய அல்லது வளர்ந்த நாடுகளின் கொள்ளைக்கு
வழிவகுக்க கூடிய ஒன்றாக இருக்கிறது.
ரூபாய்
மதிப்பு குறைவு பணவீக்கத்திற்கு இட்டு செல்வதால், தொழிலாளர், விவசாயி மற்றும் நடுத்தர
மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகிறது. பணவீக்கம் உண்மை ஊதியத்தின் மதிப்பை
குறைப்பதால், விலையேற்றத்தை எதிர் கொள்ள முடியாத நிலையை தொழிலாளி வர்க்கம் சந்திக்கிறது.
இது வாங்கும் சக்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி, சந்தையில் மந்தத்தையும், வேலையின்மை
அதிகரிப்பையும் உருவாக்குகிறது. இதை மார்க்சீய மூலவர்கள் ஏற்கனவே கூறியிருந்தாலும்,
நடைமுறையில் தற்போது சந்திக்கும் பிரச்சனைகள் காரணமாக, தொழிலாளி வர்க்கம் உணர்ந்து
கொள்ளும் வாய்ப்பு அதிகம். இதை பயன் படுத்த வேண்டியுள்ளது.
இலங்கையில்
பொருள்கள் மீதான விலையேற்றம் மேற்படி பணவீக்கம், இலங்கை ரூபாயின் மதிப்பு டாலருக்கு
எதிராக சரிந்தது ஆகியவை காரணம். ஒரு அமெரிக்க டாலருக்கு இலங்கை ரூபாயில் 358.77 அளிக்க
வேண்டும். எனவே தான் அங்கு பெட்ரோலிய பொருள்களின் விலை மிக அதிகரித்து, மக்கள் நுகர
முடியாத நிலை ஏற்பட்டது.
பெரும்
பணக்காரர்கள் ஏன் பாதிக்கப்படுவதில்லை என்ற கேள்வி முன்னுக்கு வருவது நியாயமானதே.பெரும்
பணக்காரர்கள் தங்கள் சொத்தை டாலராகவும், தங்கமாகவும் மாற்றி வைத்து இருக்கும் காரணத்தாலும்,
அந்நிய நாட்டு வங்கிகளில் சேமித்து வைத்து இருப்பதாலும் அவர்களுடைய சொத்துகள் பாதிக்கப்
படுவதில்லை. அல்லது மிகக் குறைவான பாதிப்பை சந்திக்கிறது. அதேநேரம் சிறு,குறு மற்றும்
நடுத்தர தொழில் நடத்துவோர் மிகப் பெரிய பாதிப்பை சந்திக்கின்றனர். தொழில் நசிவை சந்தித்து,
பெரும் இழப்புக்கு ஆளாகின்றனர்.
அதேபோல்
தொழில் நடத்துவோர், மூலப்பொருள் இறக்குமதி போன்றவற்றை காரணமாக கூறி தொழிலாளரின் உண்மை
ஊதியத்தை உயர்த்த அனுமதி மறுக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர் என்பதையும் உணர வேண்டும்.
எனவே மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையான
சரிவை சந்தித்துள்ளது. இந்தியாவின் சொத்துக்களை, இந்தியா மீதான நன்மதிப்பை காற்றில்
பறக்க விட்டதைப் போலவே, ரூபாயின் மதிப்பை காற்றில் பறக்க விடும் பணியை செய்து வருகிறது.
1991
நவதாராளமய கொள்கை அமலாக துவங்கிய போது 17.01 ரூபாயாக இருந்த டாலருக்கு நிகரான மதிப்பு,
பாஜகவின் மோடி தலைமையில் ஆட்சி அமையும் போது, 59.44 ரூபாயாக சரிந்தது. இந்த எட்டு ஆண்டுகளில்
79.87 என பெரும் சரிவை சந்தித்துள்ளது. இவை வெறும் கணக்கல்ல. மிகப்பெரிய சமூக தாக்குதல்,
மக்களை புறக்கணிக்கும் கொள்கையின் வெளிப்பாடு, என்பதை உணர்வதும் எதிர் வினையாற்றுவதும்
வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக